தொழிலாளிக்கு கத்திக்குத்து
திண்டுக்கல்லில், தொழிலாளியை கத்தியால் குத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் குடைபாறைப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சூர்யா (வயது 24). கூலித்தொழிலாளி. அவருடைய சித்தி மகள் மனிஷா (25). இவருடைய கணவர் குமரேசன் இறந்து விட்டதால், குடைபாறைப்பட்டியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் மணிஷாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த சர்தார் (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த சூர்யா, மனிஷாவை கண்டித்தார். இதனை மனிஷா, சர்தாரிடம் கூறியதாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான குட்டியபட்டியை சேர்ந்த ரியாஸ்(24), பாறைமேட்டு தெருவை சேர்ந்த யோகராஜ் (27), என்.எஸ். நகரை சேர்ந்த கவுதம் (25) ஆகியோருடன் சூர்யா வீட்டுக்கு சென்று தகராறு செய்தார்.
பின்னர் அவர்கள் 4 பேரும் சேர்ந்து சூர்யாவை கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்த சூர்யாவுக்கு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சர்தார், மனிஷா, அவரது தாய் தமிழரசி (50), அக்காள் சீமாதேவி (27) உள்பட 7 பேர் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த சர்தார், ரியாஸ், யோகராஜ், கவுதம் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.