கடலூரில் பகலில் சுட்டெரித்த வெயில்; மாலையில் ½ மணி நேரத்தில் 27 மி.மீ. கொட்டிய மழை

கடலூரில் பகலில் வெயில் சுட்டெரித்தது. மேலும் மாலையில் ½ மணி நேரத்தில் 27 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது.

Update: 2023-09-11 21:55 GMT

98.6 டிகிரி வெயில்

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் சுட்டெரிப்பதும், இரவில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை முதல் வெயில் கொளுத்தியது. மதிய வேளையில் சாலையில் அனல் காற்று வீசியதால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் பெரும்பாலான மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வீடுகளிலேயே முடங்கினர்.

இதற்கிடையே கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் சுட்டெரித்த வெயிலில் கால்கடுக்க காத்திருந்தனர். இதில் சிலர், வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக தாங்கள் கொண்டு வந்திருந்த மனுக்களையும், பைகளையும் தலையில் வைத்தபடி நின்றதை காண முடிந்தது. கடலூரில் 98.6 டிகிரி வெயில் கொளுத்தியதால், பகலில் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது.

27 மி.மீ. மழை

இந்த நிலையில் மாலை 4.30 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. பின்னர் 5 மணியளவில் மழை பெய்ய ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல பலத்த காற்றுடன், கன மழை பெய்தது. இந்த மழை இடைவிடாமல் சுமார் ½ மணி நேரம் கொட்டி தீர்த்தது. அதன் பிறகு மழை ஓய்ந்தது. இந்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது.

அதாவது கடலூரில் ½ மணி நேரத்தில் 27 மி.மீ. மழை பதிவானது. இந்த திடீர் மழையால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காண முடிந்தது. இருப்பினும் பகலில் வெயிலின் தாக்கத்தால் அவதியடைந்த மக்கள், மாலையில் பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்