மாணவர்கள் திறன் மேம்பாடு பட்டிமன்றம்
காங்கயம் அரசு கலை - அறிவியல் கல்லூரியில்மாணவர்கள் திறன் மேம்பாடு பட்டிமன்றம்
முத்தூர்
நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை, ஆங்கிலத் துறை ஆகியவை இணைந்து நடத்திய வாங்க பேசலாம் என்ற மாணவர்களுக்கான பேச்சுத் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. அதில் களத்தில் காட்சி ஊடக நிகழ்ச்சிகளில் மிஞ்சி நிற்பது சமூக நோக்கா?அல்லது பொழுதுபோக்கா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சே.ப.நசீம் ஜான் தலைமை தாங்கினார். தமிழ் உதவி பேராசிரியர் வெ.பன்னீர்செல்வம், ஆங்கில உதவி பேராசிரியர் பா.தேவகி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கல்லூரி மாணவி மு.ஷாலினி அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த பட்டிமன்றத்தில் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் சிவக்குமார் நடுவராக பங்கேற்க, சமூக நோக்கே என்ற தலைப்பில் தமிழ்த்துறை மாணவர்கள் கா.ஆகாஷ், சே.ரஞ்சிதா, மு.சங்கீதா ஆகியோரும், பொழுதுபோக்கே என்ற தலைப்பில் தமிழ்,
ஆங்கில துறை மாணவர்கள் ஜெ.மாதவன், வி.அபிநயா, எஸ்.அருணாசலம் ஆகியோரும் சொற்பொழிவாற்றி பேசினார்கள். முடிவில் காட்சி ஊடக நிகழ்ச்சிகளில் மிஞ்சி நிற்பது பொழுதுபோக்கே என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் கல்லூரி பேராசிரியர்கள், இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி
சே.கவுரி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை மாணவி சு.கவுசல்யா செய்திருந்தார்.
--------------------------