தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன.
சென்னை,
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி 22-ந் தேதியுடன் நிறைவடைந்தது. தேர்வு முடிவுகள் மே மாதம் 6-ந்தேதி வெளியிடப்பட்டன. பிளஸ்-1 தேர்வு மார்ச் 4-ந் தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் மே 14-ந்தேதி வெளியிடப்பட்டன. எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புகளுக்கு மார்ச் 26-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி முடிவடைந்தது. தேர்வு முடிவுகள் மே 10-ந் தேதி வெளியிடப்பட்டன.
இதைத்தொடர்ந்து 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதித்தேர்வு அந்தந்த பள்ளிகளில் நடைபெற்று ஏப்ரல் மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. வழக்கமாக மே மாதம் 1-ந்தேதி முதல் தான் கோடை விடுமுறை விடப்படும். ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் காரணமாக முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியாகின.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன. இதை முன்னிட்டு கடந்த 1 மாதத்துக்கு மேலாக பூட்டிக்கிடந்த பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. பள்ளி வளாகத்தை சுற்றிலும் உள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டு வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
வகுப்பறைகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தும் வளாகத்தை தூய்மை படுத்தும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மாணவர்கள் அமரும் இருக்கைகள், பெஞ்சு, மேஜை உள்ளிட்டவற்றையும் சுத்தம் செய்து வருகிறார்கள். பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.