1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

வேலூர் மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்பு, பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.

Update: 2023-06-14 17:52 GMT

வேலூர் மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்பு, பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் கடந்த 12-ந் தேதி 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் 1 முதல் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல்நாள் என்பதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்றனர்.

புத்தாடை அணிந்து, புதிய புத்தகப்பையுடன் 1-ம் வகுப்பில் சேருவதற்காக வந்த குழந்தைகள் பள்ளி வகுப்பறைக்குள் செல்ல மறுத்து அழுதனர். அந்த குழந்தைகளை பெற்றோர், ஆசிரியர்கள் சமாதானப்படுத்தி வகுப்பறைக்குள் அமர வைத்தனர். ஆனாலும் சில குழந்தைகள் பெற்றோருடன் செல்ல வேண்டும் என்று அழுததை காண முடிந்தது. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் ததும்ப உற்சாகமாக வரவேற்றனர்.

மாணவர்களுக்கு வரவேற்பு

வேலூர் காகிதப்பட்டறை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்பட பல்வேறு அரசு பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு ரோஜாப்பூ, இனிப்பு கொடுத்தும், பன்னீர் தெளித்தும், ஆரத்தி எடுத்தும் ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் நண்பர்களை கண்ட மகிழ்ச்சியில் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.

மேலும் கோடை விடுமுறையில் சென்று வந்த பல்வேறு இடங்கள் பற்றியும், சுவாரசியமான நிகழ்வுகள் குறித்தும் பேசி மகிழ்ந்தனர். தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நேற்று முதல் தொடங்கின.

வேலூர் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் என்று மொத்தம் 779 பள்ளிகள் உள்ளன. இங்கு பயிலும் மாணவர்களுக்கு முதல் நாளிலேயே விலையில்லா பாடபுத்தகங்கள், நோட்டுகள், காலணிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. முதல்நாளில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களும் புதிதாக சேர்ந்தனர் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்