பழனியில் பள்ளி மாணவிகள் திடீர் சாலை மறியல்

பழனியில், விடுதி காப்பாளர் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய கோரி பள்ளி மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-17 18:45 GMT

மாணவிகள் சாலை மறியல்


பழனி சத்யாநகர் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான பள்ளி மாணவி விடுதி உள்ளது. இங்கு பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவிகள் தங்கியிருந்து பழனி பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை அந்த விடுதியில் தங்கியுள்ள பள்ளி மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோர் பழனி சத்யாநகர் ரெயில்வே கேட் பகுதியில் உள்ள புதுதாராபுரம் சாலைக்கு திரண்டு வந்தனர்.


பின்னர் திடீரென அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காலை வேளை என்பதால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். பள்ளி மாணவிகளின் திடீர் மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதற்கிடையே மறியல் குறித்து தகவல் அறிந்ததும் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.


பேச்சுவார்த்தை


பின்னர் மாணவிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கடந்த சில வாரங்களுக்கு முன்பு பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி எங்கள் விடுதி காப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். எனவே அதை ரத்து செய்து மீண்டும் அவரை பணி அமர்த்த வேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.


அதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது மறியலை கைவிட்டு பள்ளிக்கு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்