பழுதான பேட்டரி வாகனத்தை மழையில் தள்ளிச்சென்ற பள்ளி மாணவர்கள்
பழைய சர்க்கார்பதியில் பழுதான பேட்டரி வாகனத்தை மழையில் நனைந்தபடி பள்ளி மாணவர்கள் தள்ளிச்சென்றதால் அவதிப்பட்டனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட 17 கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பழங்குடி இனமக்கள் வசிக்கின்றனர். இதில் தம்பம்பதி, பழையசர்க்கார்பதி, புதிய சர்க்கார்பதி, நாகரூத்து போன்ற கிராமங்கள் அடர் வனப்பகுதிக்குள் இருக்கிறது. இப்பகுதியில் இருந்து சுமார் 80-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளனர். மேலும் பழைய சர்க்கார்பதியில் 5-ம் வகுப்பு வரை கொண்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதற்கிடையில் பழைய மற்றும் புதிய சர்க்கார்பதி, தம்மம்பதி போன்ற பகுதிகளுக்கு பஸ் வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் கல்வி கற்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனால் பழைய சர்க்கார்பதி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி சென்று வருவதற்காக வனத்துறையினர் தன்னார்வலர்கள் உதவியை நாடி ரூ.2½ லட்சம் மதிப்பில் 12 மாணவர்கள் அமரக்கூடிய இருக்கை வசதிகளுடன் 60 கிலோமீட்டர் செல்லக்கூடிய பேட்டரி வாகனத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்பட்டது.
இதனால் மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்று வந்தனர். மேலும் வனத்துறையினர் பேட்டரி வாகனத்திற்கு ஊழியர்களை வைத்து வாகனம் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் பேட்டரி வாகனம் அவ்வப்போது பழுதடைந்து அடர் வனபகுதியில் நின்று விடுகிறது. இதேபோல் நேற்றும் பேட்டரி வாகனம் பழுதடைந்தது. இதனால் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள், மழையில் நனைந்தபடி அந்த பேட்டரி வாகனத்தை தள்ளிச் சென்றனர். இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.மேலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், பேட்டரி வாகனத்தை சீரமைத்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரி புகழேந்தியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- பேட்டரி வாகன ஓட்டுநர் வாகனம் பழுது எற்பட்டதாக ஒருமுறை கூட தெரிவிக்கவில்லை. மேலும் பேட்டரி வாகனம் தயாரித்த நிறுவனத்தின் தொலைபேசி எண் ஓட்டுநரிடம் உள்ளது. அவர்களை தொடர்பு கொண்டால் உடனடியாக சீரமைத்து தாருவார்கள். அதை விட்டு விட்டு ஏன் வாகனத்தை தள்ளி செல்ல வேண்டும். இதுதொடர்பாக விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.