மாணவிகளுடன் பேசுவதில் தகராறு:பள்ளி மாணவர்கள் கோஷ்டி மோதல்;நாகர்கோவில் பஸ் நிலையத்தில் பரபரப்பு

மாணவிகளுடன் பேசுவதில் பள்ளி மாணவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர்.

Update: 2022-09-13 20:42 GMT

நாகர்கோவில், 

மாணவிகளுடன் பேசுவதில் பள்ளி மாணவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர்.

நாகர்கோவில் பஸ்நிலையத்தில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பள்ளி மாணவர்கள் மோதல்

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணா பஸ் நிலையத்தில் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வந்து பஸ்களில் தங்களது கல்வி நிறுவனங்களுக்கும், வீடுகளுக்கும் செல்வது வழக்கம்.

இதனால் அந்த சமயத்தில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்தநிலையில் நேற்று முன்தினம் பஸ் நிலையத்தில் சில பள்ளி மாணவர்கள் இரு கோஷ்டியாக மோதிக்கொண்டனர். இதில் அவர்களுக்கிடையே கைகலப்பும் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஆனால் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.

மாணவிகளுடன் பேசுவதில் தகராறு

இது அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதில் மாணவிகளிடம் பேசுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மாணவர்கள் இரு கோஷ்டியாக மோதிக்கொண்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மாணவர்கள் நலன் கருதி அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பஸ் நிலையத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்