இடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி பள்ளி மாணவ-மாணவிகள் சாலைமறியல்

சேலத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-23 22:29 GMT

கன்னங்குறிச்சி:

ஆசிரியர் பணி இடைநீக்கம்

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கன்னங்குறிச்சி, சின்னக்கொல்லப்பட்டி, முயல் நகர், தாமரை நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக ஏற்காடு தலைசோலை பகுதியை சேர்ந்த முரளிதரன் பணியாற்றி வந்தார்.

இவர் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் வெளியே சென்று விடுவதாகவும், தனக்கு பதில் வேறு ஒரு பெண்ணை ஆசிரியராக நியமித்து அவருக்கு இவர் சம்பளம் கொடுத்து வந்ததாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் ஆய்வு செய்தபோது சம்பந்தப்பட்ட ஆசிரியர் முரளிதரன் இல்லாததால், அவரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

சாலைமறியல்

இதையறிந்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் மாணவ-மாணவிகள் நேற்று மதியம் பள்ளி முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள், இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிய படி பள்ளியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது ஆசிரியர் முரளிதரனை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோஷத்துடன் ஏற்காடு சாலைக்கு சென்றனர். அங்கு மாணவ, மாணவிகள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் மறியல் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரபரப்பு

அப்போது தங்களின் கோரிக்கை குறித்து கல்வித்துறையினரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இந்த மறியல் காரணமாக ஏற்காடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்