எர்ணாவூரில் மினி பஸ் மோதி பள்ளி மாணவன் பலி
மினி பஸ் மோதி 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்த சம்பவம் எர்ணாவூரில் சோகத்தை ஏற்படுத்தியது.;
திருவொற்றியூர்,
எர்ணாவூர் லிப்ட் கேட்டை சேர்ந்தவர் பசலுதீன். ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் அமீதுதீன் (வயது 12). இவர், திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகரில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் மினி பஸ் எதிர்பாராதவிதமாக அமீதுதீன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாணவன் அமீதுதீன், அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுபற்றி செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பஸ் டிரைவரை தேடி வருகிறார்.
மற்றொரு சம்பவம்
செங்குன்றத்தை அடுத்த இந்திரா நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் கலையரசன்(42). இவர், அலமாதியில் உள்ள இரும்பு கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கர் நகர் அருகே சென்றபோது, கன்டெய்னர் லாரி மோதி கலையரசன் பலியானார். இதுபற்றி செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த பாலவாக்கம் காந்திநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் நரசிம்மன். இவருடைய மனைவி நளினி (65). இவர், நேற்று திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். பாலவாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது முன்னால் சென்ற கார் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த நளினி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.