பள்ளி மாணவி தூக்குப்போட்டு சாவு
சின்னசேலம் அருகே தாய், தந்தையை திட்டியதால் விரக்தி: பள்ளி மாணவி தூக்குப்போட்டு சாவு தற்கொலைக்கு தூண்டிய பக்கத்து வீட்டுக்காரர் கைது
சின்னசேலம்
சின்னசேலம் அருகே மறவாநத்தம் ஊணாம்புதைகாடு, மேற்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் மோகன்(வயது 38) விவசாயி. இவரது மகள் பிரியங்கா(14) சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலை மோகனுக்கும், அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த விஜயசேகர்(38) என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த பிரியங்கா வீட்டுக்குள் ஓடிச்சென்று சேலையால் தூக்குப்போட்டுக்கொண்டார். இதைப்பார்த்த மோகனின் மனைவி யுவராணி கூச்சல் எழுப்பினார். இந்த சத்தம் கேட்டு ஒடி வந்த மோகன் மற்றும் அக்கம்பக்கத்தினர் பிரியங்காவை தூக்கில் இருந்து இறக்கி சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
பக்கத்து வீ்ட்டு குடும்பத்தினர் தனது தாய்-தந்தையரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதை கண்டு விரக்தி அடைந்த பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக விஜயசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.