அரசு பள்ளிகட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
அரசு பள்ளிகட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
தொண்டி,
திருவாடானை தாலுகா முள்ளி முனை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் உள்ள 3 வகுப்பறை கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் சேதம் அடைந்து உள்ளது. இந்த கட்டிடத்தில் அமர்ந்து பாடம் படிப்பதற்கு பள்ளி குழந்தைகள் அச்சத்துடன் இருந்து வருவதாகவும் பள்ளியின் மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் இருந்து வருவதாகவும் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அளித்திருந்தனர். அதில் இப்பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தநிலையில் நேற்று காலை பள்ளியில் வகுப்புகள் தொடங்கும் முன்பு பள்ளி கட்டிடத்தின் வகுப்பறையிலும் முன்பகுதியிலும் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் திடீரென இடிந்து விழுந்து உள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் பள்ளி குழந்தைகள் வகுப்பறையிலும் பள்ளி வளாகத்திலும் இல்லாததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுபற்றிய தகவல் அறிந்து ஊராட்சி தலைவர் அமிர்தவல்லி மேகமலை சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு மாவட்ட மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில் 3 வகுப்பறைகளில் இருந்த மாணவர்கள் பள்ளியின் மற்ற கட்டிடங்களில் அமர வைக்கப்பட்டனர். போதிய இட வசதி இல்லாததால் அருகிலுள்ள புயல் காப்பகத்தில் தற்காலிகமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.