தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.
கட்டுரைப்போட்டி
அண்ணா, தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய ஜூலை மாதம் 18-ந் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. கட்டுரைப்போட்டியில் 24 மாணவர்களும், பேச்சுப்போட்டியில் 27 மாணவர்களும் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அன்புச்செழியன் போட்டியை தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். 10 தலைப்புகளில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் முதன்மை கல்வி அலுவலக சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கணேசன், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியை அஞ்சுகவதி மற்றும் சுசீலா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். இந்த போட்டியில் தேர்ப்பட்டி உயர்நிலைப்பள்ளி மாணவி மதுமிதா முதல் பரிசும், ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சிந்துமதி 2-வது பரிசும், உடுமலை ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளி மாணவி அர்பினாகத்துன் 3-வது பரிசும் பெற தேர்வு செய்யப்பட்டனர்.
பேச்சுப்போட்டியில் வென்றவர்கள்
பின்னர் நடந்த பேச்சுப்போட்டிக்கு பத்மாவதிபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை சரஸ்வதி, அய்யன்காளிபாளையம் வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளி முதுநிலை தமிழாசிரியர் பிரகாஷ், ராயர்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
இந்த போட்டியில் ஒட்டமடம் யுனைடெட் பப்ளிக் பள்ளி மாணவர் அகிலேஷ் கார்த்திக் முதல் பரிசும், அம்மாபாளையம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ரா 2-வது பரிசும், புதுராமகிருஷ்ணாபுரம் மேல்நிலைப்பள்ளி மாணவி மதுபிரத்திகா 3-வது பரிசும் பெற தேர்வு செய்யப்பட்டனர்.