அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் ரூ.1,000 உதவித்தொகை; கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் ரூ.1,000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-09-02 16:49 GMT

தேனி மாவட்டம் போடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வந்தார். அப்போது அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து விட்டு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் வகையில், புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதேபோல் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். குறிப்பாக ரூ.1,000 உதவித்தொகை திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து, கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கும் வழங்க வேண்டும்.

மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணத்தை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி, வேன், கார் உள்ளிட்ட வாடகை வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சுங்கச்சாவடி கட்டண உயர்வால் மேலும் பாதிக்கப்படுவதோடு, விலைவாசி உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. சுங்கச்சாவடி கட்டண உயர்வு, வரி உயர்வை அறிவித்து ஏழை-எளிய மக்களின் முதுகெலும்பை மத்திய அரசு உடைத்து வருகிறது. இதுதொடர்பாக சென்னையில் வருகிற 5-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான போராட்டத்தை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்