அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை
அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலார் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
போடி,
தேனி மாவட்டம் போடியில் இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலார் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழக முதல்-அமைச்சர் அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை துவங்குவதாகவும், விரைவில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும், அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார்கள். அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்குவது போல் எல்லா திட்டங்களையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிளுக்கும் வழங்க வேண்டும்.
அதேபோல் மத்திய அரசு சுங்கச் சாவடி கட்டணத்தை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி உள்ளிட்ட வாடகை வாகன உரிமையாளர்கள் சுங்கக் கட்டண உயர்வால் மேலும் பாதிக்கப்படுவதோடு, விலைவாசி உயரும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
சுங்கக் கட்டண உயர்வு தனியார் லாபத்திற்காகவே உயர்த்தப்பட்டுள்ளது. எனவே சுங்கக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் வலுவான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும்.
மத்திய அரசு தினந்தோறும் கட்டண உயர்வு, வரி உயர்வு அறிவித்து ஏழை எளிய மக்களின் முதுகெலும்பை உடைத்து வருகிறது. இதனை கண்டித்து 5 ஆயிரம் குழுக்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வருகிறோம். இதனை வலியுறுத்தி சென்னையில் 5 ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான போராட்டத்தை நடத்துவோம்.
போடியில் ஏலக்காய் விளைச்சல் குறைந்த நிலையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நூல் விலை உயர்வால் விசைத்தறி, ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்து வருகிறார்கள். கோதுமை கொள்முதலை அரசு கைவிட்டதன் விலைவாக தனியார் கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்யப்பட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அரசு கொள்முதல் கொள்கையை கைவிட்டு ஏழை எளிய மக்களின் நலனுக்கு எதிராக, கார்ப்பரேட் முதலாளிகளை வழுப்படுத்துவதே மத்திய அரசின் குறிக்கோளாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.