மயிலாடுதுறையில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி
மயிலாடுதுறையில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஒட்டப்போட்டியை கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.;
நெடுந்தூர ஓட்டப்போட்டி
அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி ஆண்டுத்தோறும் நடத்தப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நெடுந்தூர ஓட்டப்போட்டியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ராமலிங்கம் எம்.பி., ராஜகுமார் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போட்டி 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ.தூரம், பெண்களுக்கு 5 கி.மீ. தூரம் என 2 பிரிவின் கீழ் நடந்தது. போட்டியில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மற்றும் பொது மக்கள் என சுமார் 220 பேர் பங்கேற்றனர்.
பரிசுத்தொகை
நெடுந்தூர ஒட்டப்போட்டியானது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி சாய் விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10-ம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, நகர்மன்ற தலைவர் செல்வராஜ், ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துல்லாஷா மற்றும் அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.