50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம்: முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

Update: 2022-11-10 21:26 GMT

கரூர்,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்தவகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு சென்று 80 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிலையில் தற்போது 2-வது முறையாக கரூர் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா அரவக்குறிச்சி அருகே தடாகோவிலில் உள்ள மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

உற்சாக வரவேற்பு

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு ஈரோட்டில் இருந்து கார் மூலம் கரூர் மாவட்டத்திற்கு சென்றார். அப்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் நொய்யல் குறுக்கு சாலை, கரூர் பஸ் நிலைய ரவுண்டானா ஆகிய 2 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கரூர் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்-அமைச்சர் தங்கினார்.

50 ஆயிரம் விவசாயிகள்

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியளவில் கரூர் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் விழா நடைபெறும் அரவக்குறிச்சி தடாகோவில் மைதானத்திற்கு செல்கிறார்.

அப்போது முதல்-அமைச்சருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். தொடர்ந்து விழா மேடையில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங் கும் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரையாற்றுகிறார். விழாவில் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புக்கான ஆணைகள் உடனடியாக வழங்கப்பட உள்ளது. இவ்விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திண்டுக்கல் செல்கிறார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா மேடையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை விவசாயிகள் அனைவரும் பார்த்திடும் வகையில் எல்.இ.டி. திரைகள் பந்தலில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவுக்கு தனி பாதையும், முதல்-அமைச்சரின் வாகனம் வருவதற்கு தனியாகவும் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மின்விளக்குகளால் விழா பந்தல் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்