சவுக்கு சங்கருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-07-31 11:33 GMT

கோப்புப்படம்

சேலம்,

பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4ம் தேதி தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கோவை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் காரில் இருந்த 409 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சா வைத்திருந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

மேலும், சவுக்கு சங்கர் மீது கோவை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக சென்னை, மதுரை, திருச்சி நீதிமன்றங்களுக்கு சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார். சவுக்கு சங்கர் மீது தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 10 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பெண் போலீசாரை அவதூறாகப் பேசிய வழக்கில், உதகை புதுமந்து காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி புகாரின் பேரில் கைதான சவுக்கு சங்கரை உதகையில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமையன்று போலீசார் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து யூடியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறை சார்பில் நீதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். பின்னர் உதகை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சவுக்கு சங்கரை போலீசார் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில் சவுக்கு சங்கர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சவுக்கு சங்கருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக அவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்