செந்தில் பாலாஜி குறித்து அவதூறாக ட்வீட் செய்தாக வழக்கு - சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
சவுக்கு சங்கருக்கு எதிராக தொடர்ப்பட்ட வழக்கில் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை
சமூக வலைளங்களில் பிரபலமானவராக இருக்கும் சவுக்கு சங்கர் தன்னைப் பற்றி தொடர்ச்சியாக அவதூறான கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும், தனக்கு மான நஷ்ட ஈடாக ரூ.2 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி குறித்து அவதூறான கருத்துக்களை பதிவு செய்வதற்கு சவுக்கு சங்கருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி சவுக்கு சங்கர் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாகக் கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி தர்ப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும் டுவிட்டர் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதற்காக சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் தனது பதிவு குறித்து சவுக்கு சங்கர் எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்ட நீதிபதி, இனி கருத்துக்களை பதிவிடும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி செந்தில் பாலாஜிக்கு எதிராக கருத்து தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார்.