'சவர்மா' விற்பனை செய்யும் கடைகளை ஆய்வு செய்ய வேண்டும்

Update: 2023-09-19 15:59 GMT


தாராபுரத்தில் பேக்கரி மற்றும் சாலையோர கடைகளில் சவர்மா விற்பனை செய்யும் கடைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சவர்மா

நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சிக்கன் சாப்பிட்டு 13 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் சவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அனைத்து பகுதிகளிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் சவர்மா கடைகள் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள பேக்கரி மற்றும் ஓட்டல்கள், சாலையோர கடைகளில் சவர்மா சாப்பிட கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக வெளி மாநிலத்தினர் அதிக அளவில் இந்த கடைகளை நடத்தி வருகின்றனர். மாலை நேரத்தில் இது போன்ற கடைகளில் அதிக மக்கள் விரும்பி உண்ணும் உணவான சவர்மாவை குறிவைத்து கெட்டுப்போன சிக்கன்களை சூடேற்றி ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மேலும் கெட்டுப்போன பழைய சவுர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை 3 நாள் அல்லது 4 நாள் கழித்து சில கடைகளில் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மற்றும் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஒவ்வொரு கடைகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.

அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து கெட்டுப்போன (இறைச்சிகளை) பழைய சவர்மாக்களை விற்பனை செய்து வரும் கடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்