சத்துணவு-அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் நேற்று மாலை 10 அம்ச கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொருளாளர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். இதில் திரளான சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கூடுதல் பணி சுமையை கருத்தில் கொண்டு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை ஐகோர்ட்டு, தீர்ப்பின் அடிப்படையில் அலுவலக உதவியாளர்களுக்கு இணையான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி அமைப்பாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு திட்டத்திற்கென தனி துறையை ஏற்படுத்த வேண்டும். கோடை விடுமுறை வழங்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.