சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: கூட்டுச்சதி சட்டப்பிரிவை கூடுதலாக சேர்க்க கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும்- மதுரை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் வாதம்
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கூட்டுச்சதி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளை கூடுதலாக சேர்க்க கீழ் கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது.
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கூட்டுச்சதி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளை கூடுதலாக சேர்க்க கீழ் கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது.
இரட்டை கொலை வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டு அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்து அவர்கள் இருவரும் இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து, சாத்தான்குளத்தின் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கூடுதல் சட்டப்பிரிவு
இந்தநிலையில் கடந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் சில சட்டப்பிரிவுகளை கீழ்கோட்டு நீக்கியது. இது சட்டவிரோதம். இந்த இரட்டை கொலையில் கூட்டுச்சதி (120-பி) முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே கூட்டுச்சதி உள்ளிட்ட உரிய சட்டப்பிரிவுகளை கூடுதலாக சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
கீழ்கோர்ட்டுக்கு அறிவுறுத்த வேண்டும்
அப்போது சி.பி.ஐ. வக்கீல் முத்து சரவணன் ஆஜராகி, ஐகோர்ட்டில் இந்த மனுவை தாக்கல் செய்யும் நேரத்தில் இரட்டை கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் தற்போது 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. கூடுதல் சட்டப்பிரிவுகள் இந்த வழக்கில் சேர்க்கப்படாத பட்சத்தில், அது கைதான போலீசாருக்கு சாதகமாக அமைந்து விடும்.
எனவே குற்றப்பத்திரிகைகளில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கூடுதல் சட்டப்பிரிவுகளை சேர்க்க கீழ் கோர்ட்டுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வாதாடினார்.
தள்ளுபடி செய்ய வேண்டும்
பின்னர் சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன்பு ஆஜரானார்.
பின்னர் அவர் வாதிடுகையில், இந்த வழக்கில் சி.பி.ஐ.யின் கோரிக்கை ஏற்புடையதல்ல. அது தொடர்பாக எந்த ஆதாரங்களையும் இதுவரை எந்த சாட்சியும் முன்வைக்கவில்லை. சி.பி.ஐ. தரப்பில் வைக்கப்படும் கோரிக்கைக்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
இதேபோல சிறையில் உள்ள போலீஸ்காரர் முருகன் தரப்பில் ஆஜரான வக்கீலும் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.
ஒத்திவைப்பு
மேலும் சில வக்கீல்கள் அவகாசம் கோரியதால் இந்த வழக்கு விசாரணையை வருகிற 11-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.