சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: விசாரணைக்கு மேலும் 4 மாதம் அவகாசம் -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை 2020-ம் ஆண்டு போலீசார் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.

Update: 2023-12-19 23:50 GMT

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை 2020-ம் ஆண்டு போலீசார் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த இரட்டை கொலை வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க உத்தரவிடக்கோரி ஜெயராஜின் மனைவி செல்வராணி மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தபோது, 4 மாதத்திற்குள் வழக்கு விசாரணையை முடிக்க இறுதி அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி வடமலை முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இருப்பதால் சாட்சிகள் மற்றும் குறுக்கு விசாரணை உள்ளிட்ட பணிகளில் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே, கூடுதலாக 4 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மாவட்ட கோர்ட்டு தரப்பில் கோரப்பட்டது.

இதற்கு மனுதாரர் செல்வராணி தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, வழக்கின் முக்கியத்துவம் கருதி 4 மாதங்களுக்குள் சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணையை முடிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்