சாத்தான்குளம் வழக்கு - சி.பி.சி.ஐ.டி. அதிகாரி சாட்சியம்
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரி அனில்குமார் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.;
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் விசாரணைக்காக அழைத்துச்சென்று தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். இந்த இரட்டைக்கொலை குறித்து சி.பி.ஐ. வழக்குபதிவு செய்தது. இதில் அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பெண் போலீஸ் உள்ளிட்ட பல்வேறு சாட்சியங்கள் ஆஜராகி, தங்களது சாட்சியத்தை பதிவு செய்துவிட்டனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி தமிழரசி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சி.பி.சி.ஐ.டி. அதிகாரி அனில்குமார் ஆஜரானார். சிறையில் இருந்த போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அதிகாரி அனில்குமாரிடம், ஸ்ரீதர் நேரடியாக விசாரித்தார். அப்போது அனில்குமார், சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் பெயர் சேர்க்கப்பட்டது. தந்தை, மகன் கொடூரமாக தாக்கப்படுவதற்கு அவர்தான் முக்கிய காரணம் என தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி, இந்த விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.