தஞ்சை மாவட்டத்தில் 75 இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன
தஞ்சை மாவட்டத்தில் 75 இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன;
75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 75 இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
75 மரக்கன்றுகள் நடும் பணி
தஞ்சை மாவட்ட நிர்வாகம், மாவட்ட பசுமைக்குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம்-ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தை உலக புவி தினத்தன்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்தொடர்ச்சியாக 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 75 அமைப்புகள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் 75 இடங்களில் 75 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கீழ்கோவில்பத்து ஊராட்சியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்.
பாராட்டுக்கள்
இதில் இந்திய செஞ்சிலுவை சங்கம், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், இன்னர்வீல் சங்கம், ஜே.சி.ஐ. அமைப்பு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பெண்கள் இயக்கம், நேரு யுவகேந்திரா இளைஞர் மன்றங்கள், தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை தன்னார்வலர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 75 அமைப்புகளை சேர்ந்தவர்கள் பள்ளி, கல்லூரி வளாகங்கள், பொது இடங்கள், ஆஸ்பத்திரிகள், போலீஸ் நிலையங்கள், நூலகங்கள், கோவில்கள், குளக்கரைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 75 மரக்கன்றுகள் நடப்பட்டன.
மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் அனைத்து அமைப்புகளுக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தனது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின், கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கலைச்செல்வன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) சங்கர், கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், இணை செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.