பசுமை, தூய்மையை வலியுறுத்தி பொதுமக்களுக்கு மரக்கன்று-மஞ்சப்பை
திண்டுக்கல் மாநகராட்சியில் பசுமை, தூய்மையை வலியுறுத்தி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், மஞ்சப்பை வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் நகர தூய்மை இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி பஸ்நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர தூய்மையை பேணும் வகையில் எனது குப்பை எனது பொறுப்பு எனும் உறுதிமொழியை அதிகாரிகள், பொதுமக்கள் ஏற்றனர்.
இதையடுத்து திண்டுக்கல் மாநகராட்சியில் பசுமை, தூய்மை ஆகியவற்றை பேணுவதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், மஞ்சப்பை ஆகியவை வழங்கப்பட்டன. அப்போது பொதுமக்கள் பாலித்தீன் பைகளை தவிர்த்து மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும். பசுமையை பேண மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் தூய்மையை வலியுறுத்தி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டியும் நடத்தப்பட்டது.
முன்னதாக மாநகராட்சி அலுவலகத்தில் வணிகர்கள், குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள், தீங்கு விளைவிக்கும் வீட்டு உபயோக குப்பை வகைகள் என 3 விதமாக பிரித்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் கமிஷனர் (பொறுப்பு) முருகேசன், நகர்நல அலுவலர் இந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.