3-வது நாளாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
3-வது நாளாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 18 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் பணி செய்து வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 30 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து தனியார் ஒப்பந்ததாரர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தம் செய்து இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். முன்னதாக அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக துப்புரவு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் போடப்பட்ட சாமியானா பந்தலை நகராட்சி நிர்வாகம் அகற்றி உள்ளது. இருப்பினும் தங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று 3-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. வெயிலின் தாக்கத்தால் சில பெண் தொழிலாளர்கள் தலையில் துணியால் மூடியபடி போராட்டத்தில் பங்கேற்றனர்.
கொரோனா காலகட்டங்களில் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் வீதியை தூய்மை செய்த தூய்மை பணியாளர்களுக்கு அரசு நன்றி தெரிவித்தது. ஆனால் தற்போது தொழிலாளர்களின் வேலை பறிக்கப்படுவது வேதனையாக இருப்பதாக துப்புரவு தொழிலாளர்கள் கூறினர். மேலும் இதில் மாவட்ட கலெக்டர், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் தலையிட்டு உடனடியாக தொழிலாளர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர். இன்று (புதன்கிழமை) தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.