தூய்மை பணியாளருக்கு ஆயுள் தண்டனை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தூய்மை பணியாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.;

Update:2022-09-30 00:09 IST

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை கவரப்பட்டியை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 47). தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் வீட்டிற்கு யாரும் இல்லாத நேரத்தில் சென்று சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இதையடுத்து மீண்டும் சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் குழந்தைவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர். சத்யா நேற்று தீர்ப்பு கூறினார்.

ஆயுள் தண்டனை

தீர்ப்பில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தில் குழந்தைவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தாக்குதல் செய்ததற்காக 3 ஆண்டுகள் சிறையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறையும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டு சிறையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறையும், சிறுமியை சட்ட விரோதமாக அடைத்து வைத்த குற்றத்திற்காக ஒரு ஆண்டு சிறையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்