சனிப்பெயர்ச்சி விழா: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

Update: 2023-12-20 10:17 GMT

சென்னை,

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார்.

இக்கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி விழா இன்று மாலை 5.20 மணிக்கு நடக்கிறது. அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பக்தர்களுக்கான குடிநீர், கழிவறை, அன்னதானம், இலவச பஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடு, தரிசனத்திற்கான ஆன்லைன் மற்றும் கட்டண டிக்கெட், இலவச தரிசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

சனீஸ்வரரை வழிபட இலவச தரிசனம் செல்லும் பக்தர்கள் நளன் குளம் வாயிலில் இருந்து வரிசையில் நின்று தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல. வி.ஐ.பி தரிசனம் யானை மண்டபம் வழியாகவும், ரூ.1,000 தரிசன டிக்கெட் கோவில் ராஜகோபுரம் வழியாகவும், ரூ.600 தரிசன டிக்கெட் தெற்கு வீதி வழியாகவும், ரூ.300 தரிசன டிக்கெட் மேற்கு வீதி மற்றும் நளன் குளம் எதிர் வாயில் வழியாகவும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவிலைச்சுற்றி ஆன்லைன் மற்றும் கட்டண தரிசனம் டிக்கெட் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட்டில், பார்ட்டி புகைப்படம் மற்றும் கியூஆர் கோடும் வருவது போல் செய்யப்பட்டுள்ளது. வழி தவறினாலும், கியூஆர் கோடு மூலம் உரிய இடத்திற்கு சென்று சேரலாம்.

இந்தநிலையில், சனிப்பெயர்ச்சியையொட்டி திருநள்ளாறு சனி பகவான் கோவிலுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்