வீரசோழன் ஆற்றில் மணல் திருட்டு

நரிக்குடி அருகே வீரசோழன் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-01 19:21 GMT

காரியாபட்டி,

நரிக்குடி அருகே வீரசோழன் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணல் திருட்டு

நரிக்குடி அருகே வீரசோழன் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வீரசோழன் பகுதியில் பல முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் அங்கு நிலங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆதலால் இங்கு நிலங்களின் மதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது.

வீரசோழன் பகுதியில் ஏற்கனவே வீடுகள் அனைத்தும் நெருக்கமாக இருந்து வரும் நிலையில் மேலும் நிலம் வாங்கியவர்கள் பல வீடுகளை கட்டி வருகின்றனர். இந்தநிலையில் மணல் அள்ள அரசு தடை விதித்து இருந்தாலும் அதையும் மீறி வீரசோழன் ஆற்றுப்பகுதியில் இரவும், பகலுமாக தொடர்ச்சியாக மணல் அள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மூடை ரூ.50

ஆற்றுப்பகுதியில் இருந்து அனுமதியின்றி சாக்குப்பைகளில் பெண்கள் மணல் அள்ளுவதாக கூறப்படுகிறது. அவ்வாறு அள்ளப்படும் மணல் மூடை ரூ.25 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

குறைந்த விலையில் எம்.சாண்ட் கிடைத்தாலும் பெரும்பாலான மக்கள் மணல் மூலம் வீடு கட்ட தான் விரும்புகின்றனர். ஆதலால் என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை மணலை வைத்து தான் வீட்டு கட்ட வேண்டும் என பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர்.

அதிகாரிகள் நடவடிக்கை

தங்கள் தேவைக்கு மணல் கிைடப்பதால் லாரிகள் மூலமாக மணலை வாங்க வீட்டு உரிமையாளர்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை என கூறப்படுகிறது. ஆதலால் வீரசோழன் ஆற்றுப்பகுதியில் பெண்கள் மூலமாக மூடைகளில் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் ஆற்று மணலுக்கு மவுசு அதிகரித்து உள்ளது.

வீரசோழன் ஆற்றுப்பகுதியில் கொரோனா காலத்திலிருந்து தற்போது வரை தொடர்ச்சியாக மணல் அள்ளப்பட்டு வருவதாகவும், இந்த செயலில் பெண்கள் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கனிமவளம் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். எனவே வீரசோழன் ஆற்றுப்பகுதியில் மணல் அள்ளப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்