சனாதனம் விவகாரம்: உதயநிதியை கண்டித்து 11-ந் தேதி பாஜக போராட்டம்

சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து 11ம் தேதி போராட்டம் நடைபெறும் என பாஜக அறிவித்துள்ளது.

Update: 2023-09-07 06:43 GMT

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்' கடந்த செப். 2-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த 'சனாதன ஒழிப்பு' மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

இந்தநிலையில், சென்னையில் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு பதவி விலகக்கோரி 11-ந் தேதி மாலை 3 மணிக்கு பாஜக போராட்டம் நடத்துகிறது.

இதற்கு முன்பு அண்ணாமலை கூறியதாவது,

இந்து மதத்திற்கு எதிரான முழு வெறுப்பு பேச்சை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, தமிழகத்தின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வாய்முடி கொண்டு அமைதியாக பார்வையாளராக மேடையில் இருந்தார். இதனால், இந்து அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் தகுதியை சேகர் பாபு இழந்துவிட்டார்.

எனவே, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனடியாக பதவி விலக வேண்டும். செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு முன் அவர் பதவி விலகவில்லை என்றால், வரும் 11ம் தேதி சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் உட்பட மாநிலத்தில் முழுவதும் இந்து அறநிலையத்துறை அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்