அமெரிக்காவில் வசிப்பவர் வீட்டில் பதுக்கிய சாமி சிலைகள் பறிமுதல்

சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள அமெரிக்காவில் வசிப்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த விலைமதிப்புள்ள சிலைகளை போலீசார் மீட்டனர்.

Update: 2022-09-30 21:06 GMT

சென்னை,

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் விலை மதிப்புள்ள பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி சிலைகடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த்முரளி உத்தரவிட்டார்.

இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. தினகரன், சூப்பிரண்டு ரவி ஆகியோர் மேற்பார்வையில், துணை சூப்பிரண்டுகள் மோகன், முத்துராஜா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட குறிப்பிட்ட வீட்டில் புகுந்து அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அந்த வீட்டில் யாரும் இல்லை. வீட்டுக்கு சொந்தக்காரர் அமெரிக்காவில் வசிக்கிறார்.

பழங்கால சிலைகள் பறிமுதல்

அந்த வீட்டில் இருந்து தொன்மை வாய்ந்த 7 வெண்கல சிலைகளும், இரண்டு தஞ்சை ஓவியங்களும் கைப்பற்றப்பட்டன. 7 சிலைகளும் விலைமதிப்புள்ள சோழர் காலத்து சிலைகள் ஆகும். தஞ்சை ஓவியங்கள் இரண்டும், 15-ம் நூற்றாண்டு காலத்தவை. இதுபற்றி அமெரிக்காவில் வசிக்கும் அந்த வீட்டு உரிமையாளரிடம் போலீசார் செல்போனில் பேசி விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர், அந்த சிலைகள் தனது பெற்றோர் வைத்திருந்தது என்றும், அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியதாக தெரிகிறது. மேலும் அந்த சிலைகளுக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் விவரம் வருமாறு:-

புத்தர் சிலைகள்-2, பார்வதி சிலைகள்-2, கிருஷ்ணர் சிலை-1 மற்றும் தாரா சிலை ஒன்று. இன்னொன்று பெயர் தெரியாத பெண் தெய்வத்தின் சிலை. இந்த சிலைகள் மற்றும் தஞ்சை ஓவியங்கள் எந்த கோவிலுக்கு சொந்தமானவை என்று விசாரணை நடப்பதாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்