'கோவில்களில் சாமி சிலைகள் பாதுகாப்பாக இல்லை'-முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு

தமிழக கோவில்களில் உள்ள சாமி சிலைகள் பாதுகாப்பான நிலையில் இல்லை என்று முன்னாள் போலீஸ் ஜ.ஜி. பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டினார்.

Update: 2023-01-08 18:50 GMT

ராமநாதபுரம்,

தமிழக கோவில்களில் உள்ள சாமி சிலைகள் பாதுகாப்பான நிலையில் இல்லை என்று முன்னாள் போலீஸ் ஜ.ஜி. பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டினார்.

சாமி சிலைகள் பாதுகாப்பாக இல்லை

ராமநாதபுரத்தில் உலக சிவனடியார்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிவனடியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

இளைஞர்களை நியமிக்க வேண்டும்

தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு சென்று வந்துள்ளோம். இதில் நாகை, திருவாரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் சாமி செப்பு திருமேனிகள் பாதுகாப்பாக இல்லை. சாமி சிலைகள் பாதுகாப்பாக இல்லாதது வேதனை அளிக்கிறது. இதற்காக கோவில்களில் சிலைகள் வைப்பதற்கு உயர்தர பாதுகாப்பு அறை கட்ட வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை அதனை அரசு செய்யவில்லை. கோவில்களின் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ள சிறப்பு படையினரால் எந்தவித பயனும் இல்லை. கோவில் பாதுகாப்பு பணியில் ஓய்வு பெற்ற அலுவலர்களை நியமிப்பது என்பது பயனற்றது. இதுவரை கோவில் சிலை பாதுகாப்பு தனிப்படையினர் எந்தவித கோவில் கொள்ளையையும் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் இல்லை. எனவே அந்த படையில் உடல்தகுதி மிக்க இளைஞர்களை நியமித்து கோவில் சிலைகள் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்