அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம்

பள்ளிக்கல்வி அடித்தளம் தந்தாலும், உயர்கல்விதான் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்துக்கு ஏணியாக அமைகிறது.

Update: 2022-12-14 18:15 GMT

பள்ளிக்கல்வி அடித்தளம் தந்தாலும், உயர்கல்விதான் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்துக்கு ஏணியாக அமைகிறது.

12-ம் வகுப்பை படித்து முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வியை பார்த்து, பார்த்து தேர்வு செய்து படிக்கிறார்கள்.

அவ்வாறு படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு படிக்கும்போதே தொழில் சார்ந்த வழிகாட்டுப் பாதையை உருவாக்கித் தரவேண்டும் என்ற நோக்கில், அரசு தற்போது திட்டமிட்டு வருகிறது.

புதிய பாடத்திட்டம்

அதன் ஒரு பகுதியாக கொண்டு வரப்பட்டதுதான், முதல்-அமைச்சரின் கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டம். அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்களையும் உயர்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டத்தில் என்ஜினீயரிங் மாணவர்களைத் தொடர்ந்து, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் இணைக்கப்பட இருக்கிறார்கள்.

உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த மாதம் உயர் அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆகியோருடன் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

அப்போது 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர்கல்வி வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. குறிப்பாக பாடத் திட்டங்களை மாற்றுவது குறித்த விவகாரம் முக்கியமாக பேசப்பட்டது. மாணவர்களை வேலை பெறுவோராக மட்டுமல்லாமல், வேலை தருபவர்களாகவும் மாற்றும் விதத்தில் புதிய பாடத்திட்டங்கள் அமைய வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

அடுத்த கல்வி ஆண்டில்...

அதன்படி, பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன. இதுதொடர்பாக புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் வழங்கப்பட இருக்கிறது.

இந்த கூட்டத்தின் நிறைவில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, 'அறிவியல், கலை, மனிதநேயம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளும் திறன் சார்ந்ததாக இருக்கும். துணைவேந்தர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் பின்பற்றப்படும்' என்றார்.

குறிப்பாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மொழி பாடங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது அடுத்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வர இருக்கிறது.

13 பல்கலைக்கழகங்கள்

தமிழ்நாட்டில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்பட 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைப்பில் இருக்கும் கல்லூரிகளில் இந்தப் பாடத்திட்டம் நடைமுறைக்கு வரும்.

இதில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டங்களும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அந்தப் பாடங்களுடன் திறன், கணினி சார்ந்த புதிய தோற்றத்தில் பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன.

இந்த திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் அமலுக்கு வந்தால் மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் இருக்குமா? என்பது பற்றி பேராசிரியர்கள், மாணவர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

சமமான வாய்ப்பு கிடைக்கும்

தமிழ்நாடு அரசு கல்லூரி விரிவுரையாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் தெய்வராஜூ:- ''தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டமானது ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் வேறுபடுகிறது. இதிலும் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் ஒரு பாடத்திட்டமும், அப்பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு ஒரு பாடத்திட்டமும் உள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்கள் உரிய பாடத்திட்டத்தில் கல்வி கற்க முடியாத நிலை உள்ளது. நகர்ப்புற மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் என பிரிக்க கூடிய நிலை உள்ளது. கிராமப்புறங்களில் இருந்து பல்கலைக்கழகங்களில் மேற்படிப்புக்கு செல்லும் போது மாணவர்கள் சிரமம் அடைகின்றனர். எனவே பொதுப்பாடத்திட்டம் என்பது வரவேற்க கூடியதாகும். இதன்மூலம் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே பாடத்திட்ட முறை கொண்டு வரப்படும். இதேபோல இணைவு பெற்ற கல்லூரிகளுக்கும் பாடத்திட்டம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். போட்டித்தேர்வு, மேற்படிப்புக்கான நுழைவுத்தேர்வு உள்ளிட்டவற்றில் அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும். சிறந்த பாட வல்லுனர்கள் கருத்துகளை எளிய முறையில் பெற முடியும்.''

வரவேற்கத்தக்கது

கறம்பக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி ஆங்கில துறை கவுரவ விரிவுரையாளர் பிச்சைமுத்து:- அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மொழி பாடத்திற்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம் என்பது வரவேற்கத்தக்கது. மொழி பாட அறிவு மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும். இளங்கலை வகுப்புகளில் மாணவர்கள் தேர்வு செய்து படிக்கும் பாடத்திற்கு மொழி பாடம் உந்துசக்தியாக அமையும். எனவே 4 பருவ தேர்வுகளுக்கு தமிழ் கட்டாயம் என்பதும் பாராட்டத்தக்கது. அதே வேளையில் நாட்டின் பன்முகத்தன்மை, ஒருமைப்பாடு, இறையான்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். தேர்ந்த மாநில கல்வியாளர்கள், பல்கலைக்கழக மானியக்குழு, ஆட்சி மன்ற குழுவின் ஒத்துழைப்பை பெற்று இதை செயல்படுத்துவது நல்லது. மேலும் மொழி பாடத்தை கட்டாயமாக்கினால் மட்டும் போதாது, அதற்கு போதுமான பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களையும் நியமிக்க வேண்டும்.

சீரான மொழி பாடம் நல்லதுதான்

தனியார் கல்லூரி மாணவி ஹிரண்யா:- இளங்கலை பட்டப்படிப்பில் சீரான ஒரே பாடத்திட்டம் இருப்பது நல்லதுதான். மொழி பாடத்தில் வெவ்வேறு பாடத்திட்டம் இருப்பது குழப்பத்தையும் போட்டி தேர்வுகளில் வேறுபாட்டையும் உருவாக்குகிறது. ஒரே மாவட்டத்தில் சுயநிதி கல்லூரியிலும், அரசு கல்லூரியிலும் பாடதிட்டங்கள் வெவ்வேறாக இருப்பதால் நேர்முக தேர்வுக்கு செல்லும் போது சிலர் பின்னடைவை சந்திக்க நேரிடுகிறது. மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் கல்லூரி பாடத்திட்டங்களில் தொழில்சார்ந்த, வாழ்க்கை முறை சார்ந்த கல்வி சேர்க்கபட இருப்பது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் திட்டமிடலுக்கும் உறுதுணையாக இருக்கும். கல்வி என்பது ஏட்டு படிப்பாக மட்டும் இல்லாமல் வாழ்வோடு ஒன்றியதாக இருப்பது நல்லது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் தெரிவிக்க ஒரு மாதம் அவகாசம்

பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டம் மாற்றம் செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பது தமிழ்நாடு உயர்கல்வி மன்றம்தான். தற்போது இந்த மன்றம் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாதிரி பாடத்திட்டங்களை வடிவமைத்து தயாராக வைத்துள்ளது. இதனை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி அவர்களின் கருத்துகளையும் கேட்டுப்பெற இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவர் ராமசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் மாதிரி பாடத்திட்டங்கள் தயார்நிலையில் இருக்கின்றன. அடுத்த வாரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்ப இருக்கிறோம். இதனை அடிப்படையாக வைத்து அந்தந்த பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். நாங்கள் அனுப்பும் பாடத்திட்டங்களில் 25 சதவீதம் வரை அவர்களுக்கு தேவையிருப்பின், அதில் மாற்றம் செய்து கொள்ளலாம். மீதமுள்ள 75 சதவீதம் உயர்கல்வி மன்றம் கொடுக்கும் பாடத்திட்டங்களை கொண்டதாகவே இருக்கும்.இதுபற்றிய கருத்துகளை அந்தந்த பல்கலைக்கழகங்கள் ஒரு மாதத்துக்குள் எங்களுக்கு தெரிவிக்க அவகாசம் வழங்கப்படும். பின்னர், அவர்கள் இந்த பாடத்திட்டங்களை அவரவர் கல்வி கவுன்சிலில் முன்வைத்து, செனட், சிண்டிகேட் கூட்டம் வாயிலாக நடைமுறைப்படுத்துவார்கள். 2023-24-ம் கல்வியாண்டில் இந்த புதிய பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறோம். அதேபோல், பல்கலைக்கழகங்கள் கொண்டு வரும் பாடத்திட்டங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருந்தால், அதில் தலையிட்டு ஒழுங்குப்படுத்த எங்களுக்கு முழு அதிகாரம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்