சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம்

`ஓம்சக்தி, மகாசக்தி' கோஷம் முழங்க சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2022-07-06 17:33 GMT

சமயபுரம், ஜூலை.7-

`ஓம்சக்தி, மகாசக்தி' கோஷம் முழங்க சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மாரியம்மன் கோவில்

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. சக்தி தலமாக இக்கோவில் விளங்குகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி ஆகும். அதன்படி, இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றன.

கோவிலின் முன்பகுதியான கிழக்குப் பக்கத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்காக கோவில் நிதி ரூ.2½ கோடியில் சுமார் 30 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணி நடந்து முடிந்தது. மேலும் கோவிலின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

ஏழு நிலைகளில் ராஜகோபுரம்

இந்நிலையில், ராஜகோபுரம் கட்டும் பணி காலதாமதம் ஆனதால் முதல் கட்டமாக வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, விரைவில் ராஜகோபுரத்தின் கட்டுமான பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையார் கிராமத்தை சேர்ந்த பொன்னர்-சங்கர் என்ற இரட்டை சகோதரர்கள் ராஜகோபுரம் கட்டி தர முன்வந்தனர். இதையடுத்து திட்ட மதிப்பீடு செய்து 73 அடி உயரத்தில் 7 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டது. இதில் 324 தெய்வீக சிலைகள் அழகுற வடிவமைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து ராஜகோபுரத்தின் உச்சியில் பொருத்துவதற்காக 7 கலசங்கள் பிரத்யேகமாக கும்பகோணத்தில் தயார் செய்யப்பட்டது. அந்த கலசங்கள் உபயதாரர்களின் சொந்த ஊரான நன்செய் இடையார் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அழகு நாச்சியம்மன் கோவில், மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

கும்பாபிஷேகம்

அதைத்தொடர்ந்து, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் பாதுகாப்பாக 7 கலசங்களும் வைக்கப்பட்டு பரமத்திவேலூர், காட்டுப்புத்தூர், தொட்டியம், முசிறி வழியாக சமயபுரம் மாரியம்மன் கோவில் கொண்டுவரப்பட்டு ராஜகோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 4-ந்தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கியது. நேற்று முன்தினம் காலையில் 2-ம் கால யாகபூஜையும், மாலையில் 3-ம் கால யாகபூஜையும் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ராஜகோபுர கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4.30 மணி அளவில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம் 4-ம் கால யாகபூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு மகாபூர்ணாஹூதியும், தீபாராதனை, யாத்திரா தானம் நடைபெற்றது. தொடர்ந்து 7 மணிக்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கொடி அசைக்க 7 நிலைகள் கொண்ட கிழக்கு ராஜகோபுரத்திற்கு மேளதாளங்கள் முழங்க, வாணவெடிகள் ஒலிக்க புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் எஸ்.கே.ராஜா பட்டர் தலைமையில் சமயபுரம் கோவில் அர்ச்சகர்கள் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு `ஓம்சக்தி, மகாசக்தி' என்ற பக்தி கோஷத்துடன் ராஜகோபுரத்தை தரிசனம் செய்தனர்.

டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு

கும்பாபிஷேகத்தை காண்பதற்காக கோவிலின் நான்கு புறங்களிலும் மற்றும் கோவிலைச்சுற்றியுள்ள மாடி வீடுகளிலும் ஏராளமான பக்தர்கள் கூடி இருந்தனர். அவர்கள் மீது சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் குழாய் மூலம் புனித நீரை தெளித்தனர். இதேபோல் டிரோன் மூலமும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், ஏழு நிலை ராஜகோபுர உபயதாரர்கள் இரட்டைச் சகோதரர்களான பொன்னர்-சங்கர், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. அவைத்தலைவர் சிலையாத்தி அம்பிகாபதி, ஸ்ரீராம் பில்டர்ஸ் உரிமையாளர் என்ஜினீயர் சுரேஷ்குமார், இனாம் கல்பாளையம் ஊராட்சி தலைவர் எம்.ஆர்.வி.பாஸ்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

போலீசார் குவிப்பு

கும்பாபிஷேகத்தையொட்டி திருட்டுகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் திருச்சி போலீஸ் ஐ.ஜி. சந்தோஷ்குமார் உத்தரவின்படி, திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணகுமார் மேற்பார்வையில், எஸ்.பி.சுஜித்குமார் தலைமையில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார், போக்குவரத்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ச.கண்ணனூர் பேரூராட்சி தலைவர் சரவணன், செயல் அலுவலர் சந்திரகுமார் ஆகியோர் மேற்பார்வையில் பேரூராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்து இருந்தனர். பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து கழகத்தின் சார்பில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி, மணியக்காரர் பழனிவேல் மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்