பா.ஜனதாவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி: "சரத்குமாரை வரவேற்கிறோம்" - எல்.முருகன்

பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி செயல்பட முடிவு செய்திருப்பதாக அந்த கட்சியின் நிறுவனர் சரத்குமார் தெரிவித்திருந்தார்.

Update: 2024-03-06 18:00 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 2-ந்தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் முழு அதிகாரம் சரத்குமாருக்கு வழங்கப்படுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில், மத்திய இணை-மந்திரி எல்.முருகன், மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் சரக்குமாரை நேற்று சந்தித்து, தேர்தல் கூட்டணி தொடர்பாக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில், உடன்பாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்திருப்பதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "நாடு வளம் பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கி மீண்டும் நல்லாட்சி அமைந்திட, 3-வது முறையாக நரேந்திர மோடியை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்க பா.ஜனதாவுடன் இணைந்து செயல்பட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி முடிவு எடுத்துள்ளது. மற்ற விவரங்களை, இன்னும் ஒரு வாரத்தில் தெரிவிக்கிறேன்" என்று அதில் சரத்குமார் தெரிவித்தார்.

பா.ஜனதாவுடன் கூட்டணி என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அறிவித்ததை தொடர்ந்து, மத்திய இணை-மந்திரி எல்.முருகன், தனது 'எக்ஸ்' சமூகவலைதளத்தில், "பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்தும் விதமாகவும், மத்தியில் நடைபெற்று வரும் பத்தாண்டு கால நேர்மையான மற்றும் தேச நலன் மிக்க நல்லாட்சி தொடர்ந்திடவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து பயணிப்பதென்று முடிவு செய்துள்ள, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர், சரத்குமாரை அன்புடன் வரவேற்கிறோம். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவிற்கு பலம் சேர்க்க, இரு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் இணைந்து செயல்படுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

மாநில தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் சமூகவலைதளத்தில், 'சரத்குமாரின் வரவு தமிழகத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிச்சயம் உந்துசக்தியாக அமையும் என்பது உறுதி' என்று வரவேற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்