விற்பனை தொடர்ந்து அதிகரிப்பு: தமிழ்நாட்டில் வளம் கொழிக்கும் வண்ண மீன் வளர்ப்பு தொழில்

வண்ண மீன்கள் வளர்ப்பு. உலகின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஆரம்பத்தில் ஆடம்பர பங்களா வீடுகளின் அழகை மெருகூட்டுவதற்காக வண்ண மீன்கள் பெரிய கண்ணாடி பேழையில் வளர்க்கப்பட்டன.

Update: 2023-03-02 14:14 GMT

நாளடைவில், வண்ண மீன்களை வளர்த்தால் கஷ்டங்கள் நீங்கி, செல்வம் பெருகும் என்ற ஐதீக தகவல் மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்தது. எனவே தமிழ்நாட்டில் வண்ண மீன்கள் மீதான மோகம் மக்களிடையே அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் வண்ண மீன்கள் வளர்ப்பு தொழில் செழித்து வருகிறது.

வண்ண மீன்கள் விற்பனை சந்தை

தமிழ்நாட்டில் இந்த தொழில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருப்பது மீன்வள ஆராய்ச்சி மையத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் வண்ண மீன்கள் வளர்ப்பு மையமாக கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்கள் முன்பு இருந்தன. தற்போது அந்த இடத்தை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை பெற்றுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதி என்ற வி.ஐ.பி. அந்தஸ்தை பெற்றிருக்கும் கொளத்தூரில் ஆசியாவில் மிகப்பெரிய வண்ண மீன்கள் விற்பனை சந்தை அமைந்துள்ளது. கொளத்தூர் பாடசாலை தெரு, தெற்கு மாடவீதி ஆகிய 2 தெருக்களின் இருபுறங்களிலும் 150-க்கும் மேற்பட்ட வண்ண மீன்கள் விற்பனை கடைகள் இருக்கின்றன. இந்த சந்தையில் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து கண்ணை கொள்ளை கொள்ளும் விதவிதமான வண்ண மீன்கள் விமானம் மூலம் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்த மீன்கள் இனப்பெருக்கத்துக்காக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, தேவம்பேடு போன்ற பகுதிகளில் 4 ஆயிரம் இடங்களில் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மீன்கள் வளர்ச்சி அடைந்தவுடன் கொளத்தூர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

'பாக்கெட்' கட்டி விற்பனை

இந்த சந்தையில் ரூ.1 முதல் ரூ.10 லட்சம் வரையில் வண்ண மீன்கள் கிடைக்கின்றன. கடைகளில் மட்டுமின்றி தள்ளுவண்டிகளில் காய்கறிகளை விற்பனை செய்வது போல் அழகிய வண்ண மீன்கள் 'பாக்கெட்' கட்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மீன்களை வளர்ப்பதற்கான கண்ணாடி குவலைகள், மீன் தொட்டியை அலங்கரிக்கும் பொருட்களும் பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

இங்கு மலிவான விலையில் அதிகளவில் மீன்கள் கிடைப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மீன் வளர்ப்பு பிரியர்கள் படையெடுத்து வருகிறார்கள். தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களும் கொளத்தூர் வண்ண மீன்கள் சந்தையின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு விமானம், ரெயில் மூலம் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வண்ண மீன்கள் விற்பனை நல்ல வருவாயை ஈட்டி தருவதால் மெச்ச படித்தவர்களும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு வண்ண மீன்கள் விற்பனை- உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.ராஜராஜன் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 15 ஆயிரம் வண்ண மீன்கள் விற்பனை கடைகள் உள்ளது. இந்த தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் குடும்பங்கள் பயன் பெறுகின்றனர். தினந்தோறும் ரூ.40 லட்சம் அளவுக்கு விற்பனை நடக்கிறது.

தற்போது இந்தியாவில் 300 வகையான வண்ண மீன்கள் உள்ளன. உலகளவில் 2 ஆயிரம் வண்ண மீன்கள் இருக்கின்றன. எனவே இந்தியாவில் இல்லாத வண்ண மீன் இனங்களை கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

3 மாத பயிற்சி

இதன் மூலம் வண்ண மீன்கள் விற்பனை மேலும் அதிகரிக்கும். அரசாங்கத்துக்கு வரி வருவாய் பெருகும். எனவே மீன்வளத்துறை அதிகாரிகள், வண்ண மீன் வளர்ப்பில் கைத்தேர்ந்த நபர்களை உலக நாடுகளுக்கு அழைத்து செல்ல வேண்டும். இங்கு இல்லாத மீன் வகைகளை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்து அவர்களுக்கு அந்த நாட்டிலேயே 3 மாதம் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அனைத்து நாடுகளின் வண்ண மீன்களும் கிடைக்கும் இடம் என்ற மிகப்பெரிய புகழை நாம் பெற வேண்டும். வண்ண மீன்கள் வளர்ப்பு தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் அதிகம் இருக்கிறது. அவர்கள் எங்கள் சங்கத்தை அணுகலாம். இந்த தொழில் ஈடுபட வேண்டும் என்றால் அனுபவம் தேவை. எனவே எந்த மீன்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது அவசியம். எப்படி இரை வழங்க வேண்டும். தண்ணீரை மாற்ற வேண்டும் என்பதை அறிய வேண்டும். எனவே மீன் வளர்ப்பு பண்ணையில் 3 மாத காலம் பயிற்சி பெறுவது அவசியம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாஸ்து மீன்கள்

கொளத்தூர் வண்ண மீன்கள் விற்பனை சில்லரை வியாபாரி சம்பந்தம் கூறியதாவது:-

நான் இந்த தொழிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் ஈடுபட்டு வருகிறேன். என்னுடைய கடைக்கு சென்னை மட்டுமின்றி வேலூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். வண்ண மீன்கள் வளர்ப்பு எளிய தொழில்தான்.

ஆனால் மீன்களை பாதுகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மீன்கள் வசிப்பதற்கு தண்ணீரும், ஆக்சிஜனும் முக்கியம் என்பதால் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வாஸ்து மீன்கள் விற்பனை அதிக லாபம் தரக்கூடியது. தாய்லாந்து நாட்டில் இருந்து இந்த வகை மீன்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தது. ஆனால் தற்போது இந்த வகை மீன்கள் இறக்குமதி குறைந்துள்ளது. இதனால் வாஸ்து மீன்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்