மாசி களரி திருவிழாவை முன்னிட்டு திருப்புவனம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

மாசி களரி திருவிழாவை முன்னிட்டு திருப்புவனம் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

Update: 2023-02-14 18:45 GMT

திருப்புவனம், 

மாசி களரி திருவிழாவை முன்னிட்டு திருப்புவனம் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

ஆட்டுச்சந்தை

திருப்புவனத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன்கிழமைகளில் வாரச்சந்தைகள் நடைபெறும். இதில் செவ்வாய்க்கிழமை ஆடு, கோழி, காய்கறி, பழங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நடைபெறும். புதன்கிழமை மாட்டு சந்தை நடைபெறும். வாரச்சந்தையில் திருப்புவனத்தை சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறி மற்றும் பொருட்களை வாங்கிச் செல்வார்கள்.

வருகிற 18, 19, 20 ஆகிய தேதிகளில் மகாசிவராத்திரி என்ற மாசி களரி திருவிழா வருகிறது. நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் உள்ள குலதெய்வ கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். பொதுமக்கள் தங்களின் குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். சிலர் வெளியூர்களில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்தும் கோவிலில் தங்கி செல்வார்கள். ஒரு சில பகுதிகளில் 3 நாட்கள் தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெறும். மகா சிவராத்திரிக்கு மறுநாள் இரவு கிடாய்கள் வெட்டி அன்னதானம் நடைபெறும்.

ரூ.1 கோடிக்கு விற்பனை

திருவிழாக்களுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் திருப்புவனத்தில் ஆட்டுச்சந்தை களை கட்டியது. மதுரை, மேலூர், மானாமதுரை, பார்த்திபனூர், பரமக்குடி, விருதுநகர், காரியாபட்டி ஆகிய பகுதிகளிலிருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

வியாபாரிகள் முதல் நாள் மாலையிலேயே ஆடுகளை கொண்டு வந்து கட்டியதால் அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

திருவிழாவிற்காக கிடாய்கள் கூடுதல் விலைக்கு விற்பனையானது. இதே போல் கோழி, சேவல்கள் அதிகம் விற்பனையானது. சந்தைக்கு விற்பனைக்காக ஆடுகளை கொண்டு வந்த வேன்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆட்டுச்சந்தையில் சுமார் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்று இருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்