சேலம்: எடப்பாடி போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

போலீஸ் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-08-06 06:45 GMT

சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் அருகே எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் எடப்பாடி போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த போலீஸ் நிலையத்தில் இன்று அதிகாலை திடீரென அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் போலீஸ் நிலைய வளாகத்தில் விழுந்து வெடித்து சிதறியது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வெளியே வந்து பார்த்தபோது அப்பொருள் வெடித்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக பற்றி எறிந்த தீயினை அணைத்த போலீசார் வெளியே வந்து பார்த்தபோது அங்கு யாரும் இல்லாத நிலையில், மர்ம நபர்கள் சிலர் போலீஸ் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், சங்ககிரி டி.எஸ்.பி ராஜா உள்ளிட்ட போலீசார் எடப்பாடி போலீஸ் நிலையத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் எடப்பாடி போலீஸ் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் போலீஸ் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அண்மையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சிலர் மீது எடப்பாடி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாரேனும் இதுபோன்ற குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்