வீட்டிற்கு மதுபோதையில் வந்த வாலிபர் கொடூர கொலை.. கணவன்-மனைவி தலைமறைவு

வீட்டின் மொட்டை மாடியில் மது குடித்த அடையாளம் இருந்தது, காலி மதுபாட்டிலும் கிடந்துள்ளது.

Update: 2024-01-05 07:23 GMT

சேலம்:

சேலம் சூரமங்கலம் அடுத்த பூனைகரடு பகுதியை சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவரது வீட்டில் கடந்த வாரம் ஒரு தம்பதி வாடகைக்கு குடி வந்தனர். அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அவர்களது வீட்டுக்கு வாலிபர் ஒருவர் மதுபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சத்தம் கேட்டு அய்யம்பெருமாள், அந்த தம்பதி இருந்த வீட்டுக்கு சென்று சீக்கிரம் வீட்டை காலி செய்யுங்கள் என கூறிவிட்டு சென்றார்.

இந்தநிலையில், வீட்டிற்கு வந்திருந்த வாலிபர் நேற்று காலை மொட்டை மாடியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அய்யம்பெருமாள் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், அந்த வாலிபர் மர்ம உறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அங்கு மது குடித்த அடையாளம் இருந்தது, காலி மதுபாட்டிலும் கிடந்துள்ளது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கணவன்-மனைவியை தேடி வருகின்றனர். அவர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

விசாரணையில், தலைமறைவானவர்கள் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த பாலு என்ற பாலமுருகன், அவருடைய மனைவி வரலட்சுமி என்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட வாலிபர் திருச்சி மாவட்டம், துறையூர் ஆலந்துடையான்பட்டியை சேர்ந்த உத்திரகுமார் மகன் தியாகு (வயது 24) என தெரியவந்துள்ளது.

இவருக்கு பிரியா என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். தியாகு திருப்பூரில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் திருப்பூருக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்ட நிலையில் சேலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளது தெரியவந்துள்ளது.

அவர் எதற்காக சேலத்திற்கு வந்தார்?, தம்பதி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்தவர்களுக்கும், அவருக்கும் என்ன தொடர்பு? கள்ளக்காதல் பிரச்சினையில் கொலை நடந்ததா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்