சேலம்: மாணவிகளை மசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது..!

சேலத்தில் பள்ளி மாணவிகளை மசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-08-11 08:55 GMT

மேட்டூர்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் கருங்கல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 144 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மேட்டூர் மாதையன்குட்டை ஜீவா நகரை சேர்ந்த ராஜா (51) என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார்.

இவர் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கு மாணவிகளை தனது அறைக்கு அழைத்து தினமும் கை, கால்களை அமுக்கிவிட்டு தலையை மசாஜ் செய்து விடுமாறு வற்புறுத்தி உள்ளார். இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கூடத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் தலைமை ஆசிரியர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது சிலர் கற்களை வீசி தலைமை ஆசிரியர் ராஜாவை தாக்க முயற்சி செய்தனர். இதையடுத்து போலீசார் ராஜாவை அருகில் உள்ள வகுப்பறைக்குள் பூட்டி பாதுகாத்தனர். இதை தொடர்ந்து ராஜாவை கைது செய்யக்கோரி மேட்டூரில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த மேட்டூர் ஆர்.டி.ஓ தணிகாசலம், தாசில்தார் முத்துராஜா, டி.எஸ்.பி.மாரிமுத்து, கொளத்தூர் வட்டார கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் சமாதானம் அடைந்த பெற்றோர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தலைமை ஆசிரியர் ராஜாவை அழைத்து சென்றனர். பாதிப்புக்குள்ளான மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். பின்னர் தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். முன்னதாக கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி ராஜாவை பணி இடை நீக்கம் செய்து உத்தர விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்