அஞ்சலகங்களில் பெண்களுக்கு சேமிப்பு பத்திரம் விற்பனை

கோவில்பட்டி கோட்ட அஞ்சலகங்களில் பெண்களுக்கு சேமிப்பு பத்திரம் விற்பனை செய்யப்படுகிறது.;

Update:2023-04-12 00:15 IST

கோவில்பட்டி:

கோவில்பட்டி கோட்டி அஞ்சல் கண்காணிப்பாளர் சு.சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெண்களுக்கான அதிக வட்டி விகிதத்துடன் கூடிய பிரத்தியேக சேமிப்பு திட்டம் அஞ்சலகங்களில் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது அந்த சேவை அனைத்து அஞ்சலகங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இது பெண்களுக்கு மட்டுமே ஆன சிறப்பு சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தில் 2 ஆண்டுகளில் குறைந்த பட்சமாக ரூ 1000 முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.

இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். மேலும் அஞ்சலகங்களில் வழங்கப்படும் பெரும் பான்மையான சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அஞ்சலகங்களில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் மற்றும் ஏனைய சிறுசேமிப்பு திட்டத்தின் அதிக வட்டி விகிதத்தை பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் அறிந்து கொள்ளும் வகையில், கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை அஞ்சலகங்கள் மற்றும் துணை, கிளை அஞ்சலகங்களில் தனி கவுண்டர் அமைக்கப்பட்டு சிறப்பு மேளா நடைபெற்று வருகிறது. பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்