பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.5 கோடிக்கு ஆடு, மாடு விற்பனை

வாணியம்பாடி சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.5 கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனையாயின.

Update: 2023-06-25 11:31 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடி சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.5 கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனையாயின.

சந்தை

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரிய மாட்டு சந்தையாக வாணியம்பாடி மாட்டு சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த மாட்டு சந்தையானது ஒவ்வொரு வாரமும் நடைபெறும்.

இந்த மாட்டு சந்தையில், மாவட்டம் முழுவதிலும் உள்ள 300-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்தும், வேலூர், சித்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தங்கள் மாடு மற்றும் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வதும், வாங்குவதும் வழக்கம்.

இந்த நிலையில், பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, வாணியம்பாடி பைபாஸ் ரோட்டில் உள்ள கூடுதல் பஸ் நிலையம் பகுதியில் வார சந்தைக்கு இன்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

ரூ.5 கோடிக்கு விற்பனை

வாணியம்பாடி பகுதியில் பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வசிக்கின்ற காரணத்தினால், ஏராளமான இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பதற்காக மாடு மற்றும் ஆடு வாங்குவதற்காக சந்தையில் குவிந்தனர்.

இதையடுத்து ஆடு மற்றும் மாடுகளின் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.

வழக்கமாக வாணியம்பாடி சந்தையில் ரூ.60 லட்சத்திற்கும் மேல் மாடுகள் விற்பனையாகி வந்த நிலையில், பக்ரீத் பண்டிகை காரணமாக மாடு மற்றும் ஆடு விற்பனை ரூ.5 கோடிக்கும் மேல் நடைபெற்றது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்