பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்களில்விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.30 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்களில் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.30 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன.

Update: 2023-01-18 18:45 GMT


விழுப்புரம் மாவட்டத்தில் 120 டாஸ்மாக் கடைகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 101 டாஸ்மாக் கடைகளும் என ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 221 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் சாதாரண நாட்களில் தினமும் ரூ.2 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகி வருகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தின் அருகிலேயே புதுச்சேரி மாநிலம் இருப்பதாலும் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனை போன்றவற்றை தாண்டியும் விழுப்புரம் மாவட்டம் டாஸ்மாக் விற்பனையில் முன்னிலையில் உள்ளது. பண்டிகை காலங்களில் வழக்கத்தைவிட 2 மடங்கு அல்லது 3 மடங்கு அளவிற்கு மதுபானங்கள் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது.

ரூ.30 கோடிக்கு

அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி இந்த ஆண்டு மட்டும் ரூ.30 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதாவது கடந்த 13-ந் தேதியன்று பிராந்தி, விஸ்கி, பீர் உள்ளிட்ட மது வகைகள் ரூ.4 கோடியே 62 லட்சத்து 56 ஆயிரத்து 230-க்கும், போகிப்பண்டிகையான 14-ந் தேதியன்று ரூ.6 கோடியே 15 லட்சத்து 27 ஆயிரத்து 495-க்கும், பொங்கல் பண்டிகையன்று ரூ.9 கோடியே 52 லட்சத்து 37 ஆயிரத்து 315-க்கும், காணும் பொங்கலான நேற்று முன்தினம் ரூ.9 கோடியே 73 லட்சத்து 27 ஆயிரத்து 140-க்கும் விற்பனையானது.

மொத்தத்தில் பொங்கல் விழாவையொட்டி கடந்த 4 நாட்களில் மட்டும் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ரூ.30 கோடியே 3 லட்சத்து 48 ஆயிரத்து 180-க்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பொங்கல் விழா கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் மது விற்பனை சற்று குறைந்ததாகவும், கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு மதுபானங்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளதாகவும் டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்