கடலூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்றால் விற்பனை உரிமம் ரத்து வேளாண்மை இயக்குனர் எச்சரிக்கை

கடலூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரத்தை விற்றால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-07-02 16:14 GMT

கடலூர் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு நிலவி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து இருந்தனர். இது பற்றி வேளாண்மை துறை அமைச்சரும், போதுமான அளவு உரம் இருப்பு உள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கடலூர் மாவட்ட டெல்டா வட்டாரங்களில், குறுவை பருவத்திற்கான நெல் விதை இருப்பு, மாற்று பயிர் விதை இருப்பு, உரம் இருப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை கடலூர் வந்தார்.

தொடர்ந்து அவர் கீரப்பாளையம் வட்டாரத்தில் கீரப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் வழங்கப்பட உள்ள குறுவை தொகுப்பு திட்டத்திற்கு தேவைப்படும் உரங்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். அப்போத ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ள உரங்கள் விவசாயிகளுக்கு சென்றடைந்துள்ளதா? என தொடர்புடைய விவசாயிகளுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உறுதி செய்தார்.

ஆய்வு

பின்னர் கீரப்பாளையம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் விதைகள், மாற்றுப்பயிர் விதைகள், திரவ உயிர் உரங்கள் மற்றும் இதர இடுபொருட்கள் குறுவை சாகுபடிக்கு தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து, அதன் தரத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.

அதையடுத்து சேத்தியாத்தோப்பில் உள்ள தனியார் உரக்கடைகளில் விற்பனை முனைய கருவியில் உள்ள உர இருப்பு மற்றும் கிடங்கில் உள்ள உர இருப்பை ஒப்பீடு செய்து சரிபார்த்தார். அப்போது மாவட்டத்தில் உள்ள மரக்கடைகளில் உரம் விற்பனை செய்யும் போது நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்தால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தார்.

அறிவுரை

அதைத்தொடர்ந்து சேத்தியாத்தோப்பு மற்றும் மோவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் குறுவை தொகுப்பு திட்டத்திற்காக பெறப்பட்டுள்ள ரசாயன உரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு திட்டத்திற்கு தேவையான உரங்களை அவ்வப்போது டான்பெட் நிறுவனத்தில் இருந்து பெற்று காலத்தே விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய தொடர்புடைய கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், வேளாண்மை துணை இயக்குனர்கள், டெல்டா வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள், வேளாண்மை உதவி இயக்குனர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்