சுதந்திரதின விழாவில் ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள்

தஞ்சையில் நடந்த சுதந்திர தின விழாவில் ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தீபக்ஜேக்கப் வழங்கினார்.

Update: 2023-08-15 21:18 GMT

தஞ்சாவூர்;

தஞ்சையில் நடந்த சுதந்திர தின விழாவில் ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தீபக்ஜேக்கப் வழங்கினார்.

சுதந்திர தின விழா

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழாவில் கலெக்டர் தீபக்ஜேக்கப் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதைத்தொர்ந்து மூவர்ண பலூன்களையும், சமாதான புறாக்களையும் பறக்க விட்டார். அதைத்தொடர்ந்து தியாகிகளை கவுரவித்து, திறந்த ஜீப்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத்துடன் சென்று போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கும் கதர் ஆடை அணிவித்து கவுரவித்து 85 பயனாளிகளுக்கு 1 கோடியே 13 லட்சத்து 48 ஆயிரத்து 753 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். விழாவில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலும், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மின்கல இயங்கு வாகனம் 4 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கு பெற்ற 4 விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

ரூ.1 கோடி நலத்திட்ட உதவி

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 11 ஆயிரத்து 190 மதிப்பிலும், தாட்கோ சார்பில் 57 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 73 ஆயிரத்து 563 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 85 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 13 லட்சத்து 48 ஆயிரத்து 753 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பாக பணியாற்றிய 125 அரசு அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.பின்னர் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழாவில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., மேயர் சண்.ராமநாதன், தஞ்சை டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) தவவளவன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்