சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக பரவிய தகவல்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக பரவிய தகவலையடுத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-07-07 15:33 GMT

விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் நான்குமுனை சந்திப்புக்கும் புதிய பஸ் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபங்களுக்கு பின்புற பகுதிகளில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் மற்றும் மரத்தோட்டங்களும், குடியிருப்பு பகுதிகளும் உள்ளன. இங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் உள்ள காலியிடங்களில் முட்புதர்கள் சூழ்ந்து அடர்ந்த காடுபோன்று உள்ள நிலையில் அங்கு சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது.

இந்த தகவல் காட்டுத்தீ போல அப்பகுதி பொதுமக்களிடையே வேகமாக பரவியதோடு சமூகவலைதளங்களிலும் வைரலாகியது. இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சிறுத்தைப்புலி நடமாட்டம் இருக்கிறதா என்று கண்காணித்தனர். இருப்பினும் அதற்கான எந்தவித தடயமும் இல்லை.

இருந்தபோதிலும் அப்பகுதி மக்கள் பெரும் பீதியுடனும், பதட்டத்துடனும் இருப்பதால் அவர்களின் பாதுகாப்பு நலன் கருதி 2-வது நாளாக விழுப்புரம் சரக வனவர் ஜெயபால் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக அங்குள்ள முட்புதர்கள் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருக்கிறதா என்று தீவிரமாக கண்காணித்தனர். அதோடு அங்குள்ள பொதுமக்களிடம் யாரேனும் சிறுத்தைப்புலியை பார்த்தீர்களா என்று விசாரித்து வருவதோடு மக்கள் நடமாட்டம் மிகுந்த நகரப்பகுதிக்குள் வர வாய்ப்பு இல்லை என்பதால் பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்