குமரியில் ரப்பர் விலை கடும் வீழ்ச்சி
குமரி மாவட்டத்தில் ரப்பர் விலை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கிேலா ரூ.116 ஆக சரிந்தது.;
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் ரப்பர் விலை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கிேலா ரூ.116 ஆக சரிந்தது.
ரப்பர் சீட் உற்பத்தி
குமரி மாவட்டத்தில் பிரதான வேளாண் சார்ந்த தொழிலாக ரப்பர் சீட் உற்பத்தி உள்ளது. இங்கு அரசு ரப்பர் கழக ரப்பர் தோட்டங்கள், தனியார் தோட்டங்கள் என ஏறக்குறைய சுமார் 25 ஆயிரம் எக்டருக்கும் அதிகமான பரப்பில் ரப்பர் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் தினமும் சுமார் 250 டன் ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் பேருக்கு வாழ்வாதாரமாக அமைந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ரப்பரானது செனக்ஸ் ரப்பர் (பதப்படுத்தப்பட்ட ரப்பர் பால்), ரப்பர் சீட், ரப்பர் ஒட்டுப்பால், கிரீப் ரப்பர் (ஒட்டு பாலில் தயாரிக்கப்பட்ட ரப்பர் சீட்) என பல்வேறு வகைகளாக இந்தியாவில் பெரு நகரங்களில் உள்ள ரப்பர் ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது.
விலை வீழ்ச்சி
இந்தநிலையில் தற்போது ரப்பர் விலை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. கோட்டயம் சந்தையில் வியாபாரி விலையாக ஆர்.எஸ்.எஸ். 4 தர ரப்பர் கிலோ ரூ.132.50 ஆகவும், ஆர்.எஸ்.எஸ். 5 தர ரப்பர் கிலோ ரூ.129.50 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தரம் கிலோ ரூ.116 ஆகவும் குறைந்துள்ளது.
செனக்ஸ் எனப்படும் பதப்படுத்தப்பட்ட பாலின் விலை கிலோ ரூ.88.75 ஆக குறைந்தது. குமரி மாவட்டத்தில் 60 சதவீதத்திற்கு மேலாக செனக்ஸ் ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விலை கடுமையாக குறைந்துள்ளதால் ரப்பர் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளனர்.
கூலி கொடுக்க முடியவில்லை
இதுகுறித்து குமரி மாவட்ட சிறு ரப்பர் தோட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி ஜி. கிருஷ்ணன் நம்பூதிரி கூறியதாவது:-
குமரி மாவட்டத்தின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் ரப்பர் முக்கிய இடம் பெற்றுள்ளது. இதன் விலை வீழ்ச்சி மாவட்டத்தில் பல தாக்கங்களை உருவாக்கும். மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தொடர் மழை பெய்து ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், விலையும் தொடர்ந்து சரிவடைந்து வருவதால் விவசாயிகள் கடும் துயரத்திற்கும், கவலைக்கும் ஆளாகியுள்ளனர்.
பெரும்பாலான விவசாயிகள் ரப்பர் சீட் தயாரிக்காமல் ரப்பர் பாலை பதப்படுத்தி விற்பனை செய்கிறார்கள். இந்த ரப்பர் பாலுக்கு தற்போது கிடைக்கும் விலை விவசாயிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. இதனால் பால்வடிப்பு கூலி கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம்
ரப்பர் வியாபாரிகள் சங்க நிர்வாகி சி.பாலசந்திரன் நாயர் கூறியதாவது:-
உலக அளவில் ரப்பரை அதிகம் கொள்முதல் செய்யும் நாடாக சீனா இருந்து வருகிறது. அந்தநாட்டில் தற்போது கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழில் முடக்கம் ஏற்பட்டு ரப்பர் கொள்முதல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகச் சந்தையில் ரப்பரின் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதன் எதிரொலியாக இந்தியச் சந்தையிலும் ரப்பர் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.
கொரோனா காலத்தில் ரப்பர் கையுறைகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆஸ்பத்திரி உபகரணங்கள் செய்ய அதிக அளவில் செனக்ஸ் எனப்படும் பதப்படுத்தப்பட்ட ரப்பர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது அந்த பொருள்களின் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் செனக்ஸ் ரப்பரின் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
ஜி.எஸ்.டி. பாதிப்பு
சி.ஐ.டி.யூ. தோட்டம் தொழிலாளர் சங்கப் பொதுச்செயலாளர் எம். வல்சகுமார் கூறியதாவது:-
இந்தியாவில் பண மதிப்பு நீக்கமும், அதனைத் தொடர்ந்து அமல் படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரியும் சிறு தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்தது. குறிப்பாக ஜி.எஸ்.டி. வரியால் ஏராளமான சிறு ரப்பர் தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
மேலும், ரப்பர் டயர் உள்ளிட்ட பொருட்கள் கட்டுப்பாடின்றி இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே உள்நாட்டு ரப்பர் ஆலைகள் ரப்பரை கொள்முதல் செய்வதைக் கணிசமான அளவு குறைத்துள்ளன. இதனால் உள்நாட்டில் ரப்பர் விலை கடுமையாக சரிந்து வருகிறது. குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகளும், தொழிலாளர்களும், வியாபாரிகளும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே ரப்பர் விவசாயிகளையும், குமரி மாவட்ட பொருளாதாரத்தையும் காக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.