கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூரில் அமைதியாக நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூரில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

Update: 2022-11-06 23:48 GMT

கடலூர்,

தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு கோர்ட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் 44 இடங்களில் நடக்க இருந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும் கட்டுப்பாடு விதிக்கப்படாத கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் திட்டமிட்டபடி 6-ந்தேதி (நேற்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

கடலூரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

அதன்படி கடலூரில் நேற்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் திருப்பாதிரிப்புலியூர் ஆயிர வைசிய திருமண மண்டபத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது.

ராமலிங்க அடிகளார் 200-வது பிறந்த நாள், மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள், பாரதம் சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டு நிறைவடைந்த விழா ஆகிய முப்பெரும் விழாவை வலியுறுத்தி நடந்த இந்த ஊர்வலத்தை செம்மண்டலத்தை சேர்ந்த பாரிவள்ளல் தொடங்கி வைத்தார்.

பொதுக்கூட்டம்

ஊர்வலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஏராளமானோர் சீருடை அணிந்தும், பேண்டு வாத்தியம் இசைத்தபடியும் மிடுக்குடன் வந்தனர். ஊர்வலத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட பாரத மாதா உருவ படத்துடன் கூடிய வாகனமும் உடன் சென்றது.

தொடர்ந்து சன்னதி தெருவில் பொதுக்கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக ஆர்.எஸ்.எஸ். வட தமிழகம் மாநில குடும்ப ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக ஆர்.எஸ்.எஸ். கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த அணிவகுப்பு ஊர்வலத்தையொட்டி கடலூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம் செல்லும் வீதிகளில் போலீசார் அறிவுறுத்தியதன் பேரில் வியாபாரி கள் கடைகளை அடைத்தனர்.

கள்ளக்குறிச்சி

இதேபோல் கள்ளக்குறிச்சியிலும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இதற்காக 300-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் திரண்டனர். அனைவரும் பேண்டு வாத்தியங்களை இசைத்தபடி ஊர்வலமாக புறப்பட்டனர். தொடர்ந்து அங்கு மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அணிவகுப்பு ஊர்வலத்தையொட்டி 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூரில் நேற்று மாலை 4 மணியளவில் புறப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தை கஞ்சமலை சித்தர் திருமரபில் வந்த பொன்னம்பல சுவாமி மடாதிபதி திருவிநாயக வேல்முருக சித்தர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில், 250-க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

அமைப்பின் இசை வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குபேட்டை, காமராஜர் வளைவு சென்றது. பின்னர் அங்கிருந்து திரும்பி சங்குபேட்டை வந்து கடைவீதி வழியாக மேற்கு வானொலி திடலில் உள்ள அய்யப்பன் கோவில் அருகே சென்று நிறைவடைந்தது.

அமைதியாக நடந்தது

அணிவகுப்பு ஊர்வலத்தை ஏராளமானோர் சாலையோரத்தில் வரிசையாக நின்று பார்த்தனர். மேலும் பொதுமக்களில் சிலர் ஆங்காங்கே நின்று கொண்டு ஆர்.எஸ்.எஸ். கொடிக்கு மலர்களை தூவி மரியாதை அளித்து ஊர்வலத்தை வரவேற்றனர்.

இதையடுத்து பொதுக்கூட்டம் நடந்தது. ஊர்வலத்தையொட்டி பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 900-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பலத்த போலீசார் பாதுகாப்புடன் 3 இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் எந்தவொரு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் அமைதியாக நடந்து முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்