கோவை மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடைபெறவில்லை - பா.ஜ.க. ஊடக பிரிவு விளக்கம்
பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என மறுப்பு தெரிவித்து, பா.ஜ.க. ஊடக பிரிவு விளக்கமளித்துள்ளது.
கோவை,
கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயிற்சியில் ஈடுபட்டதாகக் கூறி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என மறுப்பு தெரிவித்து, பா.ஜ.க. ஊடக பிரிவு விளக்கமளித்துள்ளது. அதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஆண்டுதோறும் சேவா தினம் என்ற ஒரு தினத்தை கடைப்பிடிப்பதாகவும், அன்றைய தினம் பல்வேறு இடங்களில் தூய்மை பணிகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இதே போன்று மொத்தம் 23 இடங்களில் தூய்மை பணிகளை மேற்கொண்டதாகவும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி பள்ளியில் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை தூய்மை பணிகளை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் எந்தவொரு நிகழ்ச்சி துவங்கும் முன்பும், முடிந்த பிறகும் உறுதிமொழி ஏற்பது வழக்கம் எனவும், அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் பயிற்சி மேற்கொண்டது போன்று பரப்பப்பட்டு வருவதாகவும் பா.ஜ.க. ஊடக பிரிவு விளக்கமளித்துள்ளது.